எண்ணம் தான் நன்மை தீமை இரண்டிற்கும் காரணம்

உணவே மருந்து தமிழ்

“எண்ணம் போல் வாழ்க்கை” எனும் கருத்தை முன்னிறுத்தி, நாம் அனுபவித்து வாழ்ந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு காரணம் நாம் செய்த செயல்களும் நம்முள் தோன்றிய அதற்கான எண்ணங்களும் ஆகும் அன்று கூறினால் அது மிகையாகாது.

எடுத்துக்காட்டாக, “இளைஞர்களே உங்களின் நல்வாழ்க்கைக்கு கனவு காணுங்கள்” என்ற ஒரு மாபெரும் கருத்தை எடுத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில் நாம் வாழ்க்கையில் நன்றாகச் செல்வச் செழிப்புடன் வாழ நினைத்து,அதை ஒரு கனவாக காண்போம். கனவு களைந்து எழுந்தவுடன், நாம் அவ்வாறு வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, இரவு பகல் பாராமல் உழைத்து, பொருள் ஈட்டி அது நனவாக மாறினால் அது நமக்கு நன்மை. அவ்வாறின்றி, நாம் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, மீண்டும் உறங்கி, மீண்டும் அதே கனவை கண்டு கொண்டிருந்தால், அது நாளடைவில் நமக்கு கனவாகவே மாறி விடும்.இதிலிருந்து, நம் கொண்ட எண்ணம் நன்மையாக இருக்குமானால் நன்மையே விளையும்,தீமையாக இருக்குமேயானால் நிச்சயம் நமக்கு தீமை தான் விளையும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நம் எண்ணம் மற்றும் செயல்களால் விளைந்த நன்மை தீமை இரண்டையும் நாம் தயங்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இங்கே நாம் பேசும் யாவும் வாதமே.எனவே, நமது வெற்றிக்கும் தொல்விக்கும் காரணம் என்ன என்பது நமக்கு மட்டுமே தெரியும்.

காந்தமும் இரும்பும் ஒன்றையொன்று கவரும் தன்மை உடையதே ஆயினும் காந்தம் தானே இரும்பைத் தேடிக் கவராது. காந்தம் என்பது நம் எண்ணங்களையும், இரும்பை நமக்கு விளைந்த கர்ம பயன் என்றும் எடுத்துக் கொண்டால், இவை இரண்டும் ஒன்றோடொன்று சந்திக்கும் பொழுது நிச்சயம் கவரும். ஆனால் விளைந்தது நன்மை என்றால் அதற்கு காரணம் நாம்தான் என்பதும், தீமையாக இருந்தால் அதற்கு காரணம் பிறர் என்று கூறுவதும்  எவராலும் மாற்ற இயலாத மனித இயற்கையே!!!

சரியான வழியில் இன்பத்தைப் பெறவும் தவறான வழியில் அதைப் பெறவும் அறிவை பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு வரும் இன்பம் நிலையற்றது என்றும் நிலையான இன்பத்தைப் பெற வேண்டும் என்றும், அதை எவ்வாறு பெறுவது என்றும் அறிவு சிந்திக்க அந்த சிந்தனையை உயிர் பற்றினால், உடலும் மனதும் ஒருசேர நன்மையை அனுபவிக்கும் என்பதில் ஐயமில்லை.

எப்படி விதை என்ற ஒன்று இருந்தால் என்றோ ஒரு நாள் மரமாக செடியாக முளைக்கிறதோ, அதே போல் நல்லெண்ணம் கொண்டால் நல்லது விளையும்.அதே சமயம் தீய எண்ணம் கொண்டால் தீமையே விளையும்.

நம்மிடமிருந்து புறப்படுகின்ற ஒவ்வொரு செயலும் நம்மிடமே எதிர்ச்செயலாகத் திரும்பி வருவது போல் நம் செயல்கள் பிறரிடமும் பிறரது செயல்கள் நம்மிடமும் செயல்படுகின்றன. தீங்கு செய்கின்ற ஒருவன் மேலும் மேலும் தீயவனாகிறான். அவனே நல்லது செய்யத் தொடங்கும் போது மேலும் மேலும் வலிமையடைந்து எப்போதுமே நல்லதைச் செய்யக் கற்றுக் கொள்கிறான்.

இது முற்றிலும் நல்ல செயல் இது முற்றிலும் தீய செயல் என்று நாம் வரையறுக்க முடியாது. ஒரே நேரத்தில் நல்ல மற்றும் தீய விளைவுகளைத் தராத எந்தச் செயலுமே கிடையாது.

தன்னைத் தவிர வேறு யாராலும் தனக்குச் சுகமோ துக்கமோ தர முடியாது என்பதை அறிந்து கொள்கிறோம்.

இறுதியாக நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது மனமே.சிந்தித்து செயலாற்றுங்கள்.