தொழில்நுட்பத்தால் பாதிப்படையும் சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் குறிக்கின்றது. அதாவது உயிரினங்களும் அவை வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவையும் அடங்கிய இயற்கை அமைப்பு சுற்றுச்சூழல் ஆகும்.

ஒவ்வொருவரும் வீட்டை மாசுபடுதலில் இருந்து காத்தல் என்பது தெரு,நகரம்,நாடு என அனைத்தும் மாசுபடுதலை தவிர்க்கும் ஒரு பெரும் செயலாகும். இந்தியாவில் அதிக அளவிலான சுற்றுப்புற மற்றும் வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசு காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் ஆபத்து அதிகமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயற்கையமைப்பில் அமைந்துள்ள அனைத்து உயிரினங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செலுத்துகின்றன. ஆறறிவு பெற்ற மனிதன் மட்டும், தன்னை தன் சுய லாபத்திற்காக இயற்கையாய் அமைந்துள்ள அனைத்தையும் வரைமுறை இல்லாமல் அழிக்கத் தொடங்கிவிட்டான். அதன் விளைவாக மனித சமூகம் இன்று சுனாமி, புவி வெப்பமடைதல், ஓசோன் படலத்தில் ஓட்டை என பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவுப்பொருள்களால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. காற்று மாசுபடுகிறது. காடுகளும் காடுகளில் காணப்படும் மரங்களும் வியாபார நோக்கத்தில் அழிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக, மழை பொய்த்து போயின. பருவநிலை மாறி உள்ளது. பருவநிலை மாற்றதின் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒரே காரணம் எதுவென்று பார்த்தால் வளர்ந்து வரும் தொழில்நுட்பமே ஆகும்.

இராசயன தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அணுக்கரு உலைக் கழிவுகள், கழிவுகள் குவிக்கப்படுதல், எரிப்பான்கள், பிவிசி தொழிற்சாலைகள், கார் உற்பத்தித் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், பெரிய வணிகரீதியாக செயல்படும் கால்நடை பண்ணைகளிலிலிருந்து உருவாகும் கால்நடை கழிவுகள் போன்றவை வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சில.இவற்றில் இருந்து வெளியேற்றப் படும் கழிவுகளும், அதிக சத்தமும் சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கிறது.

அணுக்கரு உலை விபத்துகள் ஏற்படும் போது, எண்ணெய் கொப்பரைகளும் அதிக அளவிலான மாசினை ஏற்படுத்துகின்றன.
குளோரினேட்டட் ஹைட்ரோகார்பன்கள், உலோகங்களான லெட், காட்மியம், குரோமியம், துத்தநாகம், ஆர்சனிக் மற்றும் பென்சீன் போன்றவை முக்கிய மாசுப் பொருட்கள் ஆகும்.

ஒலி மாசுபாடு

மிக அதிக சத்தம் என்பது ஒரு விரும்பத்தகாத ஒலியாகும். சத்தத்தினால் உண்டாகும் மாசுபாடு காற்று மாசுபாட்டின் ஒரு முக்கிய அங்கம் ஆகும். 90 டெசிபல்களுக்கும் அதிகமான ஒலி தொடர்ந்து மனிதர்கள் கேட்கும்பொழுது அது கேட்கும் திறனை பாதிப்பதுடன், நரம்பு மண்டலத்தில் நிரந்தர பாதிப்பையும் ஏற்படுத்தும். அதிகப்படியான சத்தம் மனிதர்கள் எரிச்சலடையச் செய்வது மட்டுமல்லாமல், இரத்தத்தமனிகளை சுருங்கச்செய்வதால், அதிகப்படியான அட்ரீனலின் ஹார்மோன் சுரக்க தூண்டுகிறது. இதனால் இதயம் அதிக அளவு வேலை செய்யத் தூண்டப்படுகிறது. தொடர்ந்து அதிக சத்தத்தினை கேட்டுக்கொண்டிருந்தால் இரத்தத்தில் கொலஸ்ட்டிராலின் அளவு அதிகரித்து அதனால் நிரந்தரமாக இரத்தக்குழாய்கள் சுருங்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.

கழிவுகள் மற்றும் தண்ணீர் மாசுபாடு

ஏரிகள், குளங்கள், ஆறுகள், கடல்கள் போன்ற நீர்நிலைகளில் நச்சுப் பொருட்கள் கலக்கும் போது, அவை கரைந்துவிடும் அல்லது தண்ணீரில் மிதக்கும் அல்லது அடியில் தேங்கிவிடும். இதனால் தண்ணீரின் தரம் பாதிக்கப்படுவதோடு, நீர் நிலைகளிலுள்ள சூழலையும் பாதிக்கின்றன. இது மட்டுமன்றி மாசினை ஏற்படுத்தும் பொருட்கள் நிலத்தினால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீரினையும் பாதிக்கின்றன.
நீர் மாசுபாட்டினால் மனிதர்கள் பாதிக்கப்படுவதுடன், விலங்குகள் மற்றும் மீன்கள், பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. மாசுபாடடைந்த தண்ணீர் குடிப்பதற்கும், விளையாடுவதற்கும், விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்படாமல் போகிறது.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு என்பது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் காற்றில் கலப்பதால் ஏற்ப்படும் மாசுபாட்டினை குறிக்கும்.காற்று மாசுபாட்டினால் மனிதர்களுக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்திற்கும் கேடு ஏற்படுகிறது. இது மட்டுமன்றி காற்று மாசுபாட்டினால் பூமிக்கு நன்மை செய்யும் ஓசோன் படலம் சேதப்படுத்தப்பட்டு காலநிலை மாறுபாடுகளையும் ஏற்படுத்துகிறது.

தொழிற்சாலைகள், வாகனங்கள், அதிகரிக்கும் மக்கள் தொகை, நகரமயமாக்கம் போன்றவை காற்று மாசுபடுதலை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களாகும்.
பாலைவனங்களில் ஏற்படும் தூசு நிறைந்த புயல் காற்றுகள், காட்டுத்தீயினால் ஏற்படும் புகை, புற்கள் எரிவதால் ஏற்படும் புகை போன்றவை காற்றில் ரசாயனங்கள் மற்றும் தூசுக்கள் கலந்து காற்று மாசுபாடு ஏற்படக் காரணமாக அமைகிறது.

கார்பன் மோனாக்சைடு ஒரு நிறமற்ற, வாசனையற்ற வாயுவாகும். கார்பனை அடிப்படையாகக் கொண்ட பெட்ரோல், டீசல் மற்றும் மரங்கள் போன்ற எரிபொருட்கள் முழுவதும் எரிக்கப்படாதபோது கார்பன் மோனாக்ஸைடு உருவாகிறது. இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்கள் (சிகரெட்) எரியும் போதும் கார்பன் மோனாக்சைடு வாயு வெளியிடப்படுகிறது. இவ்வாயு இரத்தத்தில் கலக்கும் பிராணவாயுவின் அளவினைக் குறைக்கிறது. மேலும் நம்முடைய செயல்பாடுகளையும் குறைத்து நம்மை குழப்பத்திலும், துக்கத்திலும் ஆழ்த்துகிறது.

குளோரோபுளூரோ கார்பன்கள் பெரும்பாலும் அறை குளிர்விப்பான்களில் இருந்தும், குளிரூட்டும் இயந்திரங்களில் இருந்தும் வெளியேறி காற்று மண்டலத்தில் கலக்கிறது. இவை இதர சில வாயுக்களுடன் கலந்து, பூமியினை சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தின் அளவினை குறைக்கின்றன.
கந்தகம் பெட்ரோல், டீசல், கந்தக பாட்டரிகள், பெயிண்டுகள், கூந்தல் சாயங்கள் போன்றவற்றில் கந்தகம் இருக்கிறது. இது மனிதர்களின் நரம்பு மண்டலம், சீரண மண்டலத்தில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. சில மனிதர்களில் இது புற்று நோயினையும் ஏற்படுத்துகிறது.

வாகனங்களும், தொழிற்சாலைகளும் ஓசோனை காற்றில் வெளிவிடும் முக்கிய காரணிகளாகும். ஓசோன் மாசுபாடு நமது கண்களில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, எரிச்சலையும் ஏற்படுத்தும். மேலும் நிமோனியா மற்றும் சளி போன்ற நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியினையும் குறைக்கிறது.

புகை நிறைந்த பனி மற்றும் அமில மழை ஏற்பட நைட்ரஜன் ஆக்சைடு காரணமாக இருக்கிறது. பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற பொருட்கள் எரிக்கப்படும் போது இவ்வாயு உருவாகிறது. குளிர் காலத்தில் குழந்தைகள் சுவாச மண்டலம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவதற்கு நைட்ரஜன் ஆக்சைடு ஒரு காரணியாக அமைகிறது.

காற்றில் மிதக்கும் துகள்கள் புகை, தூசு, ஆவி போன்றவை காற்று மண்டலத்தில் நீண்ட நேரம் இருக்கும். இவை புகை மண்டலத்தினை உருவாக்கி பார்க்கும் தன்மையினையும் குறைக்கிறது. மிகச்சிறிய அளவிலான துகள்கள் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரலில் தேங்கி சுவாச மண்டல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மனித செயல்பாடுளால் வெளியிடப்படும் கழிவுகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் இருந்து ஏற்படும் கசிவுகள், மனித செயல்பாடுகளால் வெளியேற்றப்படும் கழிவு நீர், விபத்துகள், விபத்துக்களால் கடலில் கலக்கும் பொருட்கள், எண்ணெய் கிடங்குகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள்,சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், விவசாயக்கழிவு நீர் போன்றவை நீர் மாசுபாட்டை அதிகரிக்கிறது.

மாசுபாட்டினைத் தடுக்கும் எளிய வழிகள்

  1. உங்களுடைய தொலைக்காட்சிப்பெட்டிகள் மற்றும் ஒலி பெருக்கிகளில் சப்தத்தின் அளவினை மிகவும் குறைவாக வைக்கவும்
  2. தேவையானபோது மட்டுமே காரில் ஒலிப்பானை உபயோகிக்கவும்
    மேளம், பட்டாசுகள் போன்றவற்றை திருமண ஊர்வலங்களில் உபயோகிப்பதைக் குறைக்கவும்
  3. வீடுகள், தொழிற்சாலைகள், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையின் அளவினை குறைந்த அளவாகக் குறைத்தல்
  4. பட்டாசுகளை உபயோகிப்பதைத் தவிர்த்தல்
  5. குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடவும், எரிக்காதீர்கள்
  6. எச்சில் துப்புமிடத்திலோ அல்லது ஓடும் சாக்கடைகளிலோ எச்சிலைத் துப்பவும்
  7. குப்பைகளை பொதுக்குழாய்கள், கிணறுகள் மற்றும் இதர நீர் ஆதாரங்களுக்கு அருகில் கொட்டக்கூடாது
  8. பொதுத் தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தக்கூடாது
  9. இரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களையும், பாலித்தீன் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பருத்தியால் செய்த பைகளையும், பாலியெஸ்டருக்கு பதிலாக சணலையும் உபயோகிக்கவும்
  10. பாலித்தீன் பைகளை முறையாக அழிக்கவும்
  11. நிறைய செடிகளையும், மரங்களையும் நடவும்
  12. சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள், சுற்றுச்சூழல்கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற படிப்புகள் தற்போது பல்வேறு நிலைகளில் வழங்கப்படுகின்றன. மேலும், அரசும் மக்களும் பல நடவடிக்கைகளை இன்னும் எடுக்க வேண்டியுள்ளது. புதிய சிந்தனை மற்றும் தொலைநோக்கு பார்வையில் அணுகவேண்டும்.
  13. மறு சுழற்சி செய்வதற்கு ஏதுவான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
    கடைகளுக்குப் போகும் போது வீட்டிலிருந்து துணிப்பை போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும்.
  14. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மின் விளக்குகள் மற்றும் இதர உபகரணங்களை அணைத்து விட வேண்டும்.
  15. வீட்டைச் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்ப்பது காற்றில் உள்ள மாசைக் குறைக்க உதவும்.