நம்மை நாம் கட்டுப்படுத்த வேண்டும்

நம்மை நாம் கட்டுப்படுத்துவது என்பது நமது கண்கள், காதுகள், வாய், மனது, நமது பழக்க வழக்கம் போன்ற எண்ணற்ற காரணிகளைக் கொண்டுள்ளது.எடுத்துக் காட்டாக நம் உடல் உறுப்புகளைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.நமது மனதை கட்டுப்பாட்டுடன் வைப்பது நம்மையும் நம்மை சுற்றி இருப்போரையும் மகிழ்ச்சியாக வைப்பது. பல்வேறு காரணங்களால் பல சமயங்களில் பலரிடமும் வெறுப்பைக் காட்டத் தொடங்கி விடுகிறோம். அதுவே நாளடைவில் அவர்களை நமது எதிரிகளாகவும் ஆக்கி விடுகிறது. எனவே எதிரிகளை நண்பர்களாக்குவதற்கும் எதிரிகளின் செயல்களால் நாம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், எதிரிகளின் செயல்களால் நாம் முன்னேறுவதற்குமான வழிகளை கண்டறிவதற்கும்  சில வழிகள் பின்வருமாறு

கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்

கோபம் தான் நமக்கான முதல் எதிரி. அந்த கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழி தெரிந்து கொண்டால் எதிரிகளை எளிதில் அடக்கி விட முடியும். கோபத்தை நாம் காட்டும்போது, உங்கள் எதிரியும் மிக மோசமாக பலமடங்கு கோபத்துடன் உங்களுக்கு எதிராக எழுந்து நிற்க கூடும். உண்மையில் நம் எதிரிகள் தான் நமக்கான பயிற்சிகளை அளிக்கிறார்கள். நம்மிடம் இருக்கும் கோபத்தின் உந்துதலைக் கட்டுப்படுத்த அவர்கள் ஒரு வாய்ப்பை வழங்குகிறார்கள் என்று எடுத்துக் கொண்டு கோபத்தை கட்டுப்படுத்த பழக வேண்டும்.

எதிர்மறை கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்

நம் எதிரிகள் ஒருபோதும் நம்மைப் பற்றி நல்ல விதமாக சொல்லப் போவதில்லை என்பது உண்மை. எனினும் அவர்கள் சொல்லும் விசயங்களில் சில உண்மைகளும் இருக்கக் கூடும் என்பதை நினைவில் கொண்டு, ஓர் எதிரியிடம் இருந்து வெளிப்படும் கருத்துக்களைக் கேட்கும் போதெல்லாம் நாம் நம்மை ஒரு முறை சுய மதிப்பீடு செய்து கொள்வது நல்லது. நீங்கள் உங்களைச் சிறந்த மனிதனாக மாற்றிக் கொள்ள அது உதவும்.

எதிரிகள் சக்தி வாய்ந்த கூட்டாளிகளாகவும் இருக்க முடியும். நாம் நமது எதிரியிடம் உள்ள நல்ல பழக்கங்களைக் கவனித்து, அவருடன் சமாதானமான போக்கை கடைப்பிடித்து அவரை நேசிக்கத் தொடங்கினால், அவரை நாம் நல்ல நண்பராகவும் ஆக்கிக் கொள்ள முடியும் என்பது நிச்சயம். மற்றவர்களுடன் இணக்கமாக பழகும் முறையோடு நாம் நமது தனிப்பட்ட திறனை வளர்த்துக் கொண்டால், எவ்வளவு பெரிய எதிரியையும் சமாளித்து எளிதில் வெற்றி பெற முடியும்.

 

நேர்மறை சிந்தனையை வளர்த்தல்

நம்மைச் சுற்றியோ அல்லது நமக்குள்ளோ ஏராளமான எதிர்மறை விசயங்கள் இருக்குமேயானால் அதற்கு எதிரான புள்ளியைக் கண்டறிந்து அதன் வழியில் தொடரலாம். சில நேரங்களில் உங்களிடம் உள்ள நேர்மறை சிந்தனை மற்றும் நல்ல குணங்களைக் கண்டு உங்கள் எதிரிகள் கூட உங்களுக்கு உதவலாம். எதிரியைக் கருத்தில் கொண்டு பல நேரங்களில் வாழ்க்கையில் எத்தனையோ முக்கியமான விசயங்களை புறக்கணித்திருப்போம். அதுபோல் இல்லாமல் நல்ல விசயங்களை நல்ல மனிதர்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

தவறான புரிதலை சரி செய்வோம்

சில நேரங்களில் நாம் நம் நட்பு மற்றும் உறவில் ஏற்பட்ட தவறான புரிதல் கூட அந்த விரிசலுக்கான காரணமாக இருக்கலாம். அந்த காரணத்தைப் புரிந்து கொண்டால் சின்ன அணுகுமுறை மூலம் உங்கள் உறவைச் சரிசெய்து கொண்டு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பாராட்ட கற்றுக் கொள்வோம்

நாம் நமது எதிரிகளை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நம்மை நேசிப்பவர்களையும் கவனத்தில் கொள்வது முக்கியம். எல்லா இடங்களிலும் எதிரிகள் இருப்பதாக எண்ண வேண்டாம். எதிரிகள் இருக்கும் இடங்களில்தான் நம்மை நேசிப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே எதிரிகளை பற்றிய சிந்தனையை விடுத்து எப்போதும் நம்மை நேசிக்கும் மக்களைப் பற்றிய எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிரிகள் என்ன கெடுதல் செய்தாலும் அதைக் கண்டு கவலை கொள்ளாதீர்கள்.

மேற்கூறிய அனைத்திற்கும் முன்னோடியாக திகழ்வது மனதை கட்டுப்படுத்துவது ஆகும்.மனதை ஒருமுகப்படுத்த தியானமும், உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள யோகாவும் செய்யுங்கள் தியானமும், யோகாவும் செய்ய செய்ய நமது உடல் பற்றியும், நம்மை பற்றியும் நமக்கு தெரியத் தொடங்கி விடும். மனம் ஒருமுகப்பட்டு விடும். மனதை கட்டுப்படுத்தும்பட்சத்தில் உலகில் உள்ள அனைத்தையும் நாம் கட்டுப்படுத்தலாம்.