பானி பூரி நல்லதா கெட்டதா? அதன் அபாயங்கள்

பெருநகரம் தொடங்கி சிற்றூர் வரை அனைத்து இடங்களிலும் பானி பூரி வியாபாரம் நடைபெறுகிறது.கையில் ஒரு சின்னத் தட்டு கொடுக்கப்படும். பூரியின் மேல் ஒரு ஓட்டையைப் போட்டு, அதில் சிறிது மசாலாக் கலவையைத் திணித்து, அதற்கான ரசத்தில் (பானி) தோய்த்து வைக்க, நொறுங்கும் சப்தத்துடன், காரமும் லேசான புளிப்புச் சுவையுமாக நாக்கு ஒவ்வொன்றாக உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கும். இன்றைக்கு குழந்தைகளையும் வெகுவாக ஈர்க்கும் முக்கிய நொறுக்குத் தீனியாகிப் போனது பானி பூரி. எலுமிச்சை, உப்பு, பச்சைமிளகாய் கலந்த எந்த உணவாக இருந்தாலும் அதன் சுவை நம்மை ஈர்த்துவிடும். இதன் நன்மைகளையும் தீமைகளையும் காணலாம்.

 

  • சுத்தமான எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரி உடலுக்கு உகந்தது. மேலும் அதிலிருந்து உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்து கிடைக்கும். இது, அதிக கலோரி கொண்டது. அதோடு உடனடி எனர்ஜி தரக்கூடிய புரதச்சத்து மிகுந்த உணவு. ஆனால், இதில் சேர்க்கப்படும் கெட்டித் தயிர் மற்றும் சோடியம் உப்பை அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது. தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து  நோய்கள் பல வருவதற்கு நாமே வாய்ப்பு அளித்ததாக ஆகிவிடும்.
  • சுத்தம் இல்லாமல் பரிமாறப்படும் பானி பூரியைச் சாப்பிடுவது, வயிற்றில் புழுக்களை உற்பத்தி செய்ய வழிவகுக்கும். விற்பவர்களின் கைகளில் பாக்டீரியாத் தொற்று இருந்தால் அவை பூரி அல்லது ரசத்தின் மூலம் நம் உடலுக்குள் சென்று, நமக்கு வாந்தி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.மேலும் வைரஸ் மூலம் பரவும் ஹெபடைடிஸ் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.

 

  • கோதுமையில் உள்ள நார்ச்சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. மைதா மிருதுவாக இருக்க  அலொக்ஸான் என்ற ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது.  இதனால், இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு ஏராளமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ரசாயனத்தால் செரிமானக்கோளாறு, எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள்  ஏற்படும்.
  • அதேபோல பென்சாயில் பெராக்ஸைடு என்ற ரசாயனம் மைதாவின் வெண்மை நிறத்துக்காக சேர்க்கிறார்கள்.இது ஜவுளித்துறையில் துணிகள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவது மற்றும் காலில் ஆணி ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்காகவும், பொருட்களை  பளபளப்பாக்குவதற்கும் இந்த பென்சாயி்ல் பெராக்சைடு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், மைதா உணவுகளை விட்டு விடுவதே நல்லது. தவிர்க்க முடியாதபட்சத்தில் குறைந்த அளவிலேயே எடுத்துக்  கொள்ளுங்கள்.

 

  • மைதா உணவுகளை சாப்பிட்டுவிட்டால் அதற்கேற்ற நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என கொஞ்சம் அதனால் கிடைத்த ஆற்றலை செலவு செய்யும் வழிகளைப் பின்பற்றிவிடுங்கள்.
  • கடைகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரியை எடுத்துக்கொண்டால், உடலில் கெட்ட கொழுப்பு சேரும். இது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.
  • இந்த உணவை மாதம் இரு முறை எடுத்துக்கொள்வதே சிறந்தது. பானி பூரியை அளவாக வைத்துக்கொள்வது மிக நல்லது.
  • பானி பூரியிலும் சோடியம் அதிகம் அளவில் உள்ளது.அதிக அளவு சோடியம் நிறைந்த எந்த உணவையும் முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.

 

  • கடைகளில் கிடைக்கும் பானி பூரி நம்பத்தகுந்தவை அல்ல என நினைப்பவர்கள் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்யலாம்.

பானி பூரி சுவை மிகுந்தது. அது சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் உடலுக்குக் கேடு விளைவிக்காது. ஆனால், பானி பூரியையும் அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது.