17 மருத்துவ பயன்கள் மிளகு ரசத்தில்

மிளகு செரிமானத்திற்கு மட்டுமல்லாது ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. முதலில் செரிமானத்திற்கு தேவையான மிளகு ரசம் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

புளி – 1 எலுமிச்சை அளவு,கொத்தமல்லி – சிறிது,உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு:
மிளகு – 1 தேக்கரண்டி,சீரகம் – 1 தேக்கரண்டி,பூண்டு –1,வரமிளகாய் – 1, துவரம் பருப்பு – 1 1/2 தேக்கரண்டி,

தாளிப்பதற்கு:
நெய் – 1 தேக்கரண்டி,எண்ணெய் – 1 தேக்கரண்டி,கடுகு – 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிது,பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை,வரமிளகாய் – 2

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் புளியை 1 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் தாளித்ததை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மிளகு ரசம் தயார். நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.

17 மருத்துவ பயன்கள் மிளகு ரசத்தில்

  1. மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள தீமையை விளைவிக்கும் கிருமிகளை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
  2. சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுக்கிறது.
  3. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது: நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டி விட்டு வயிறு ஐட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம்தான் ஜீரணமாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.
  4. நாம் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் கரு மிளகு அதன் ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் மிளகின் புற அமைப்பு கொழுப்பு செல்களை சிதைக்கிறது. இதனால் உடல் பருமனாவதையும் தடுக்கலாம். மேலும் உடல் வியர்வையை அதிகரிக்கிறது. சிறுநீர் சீராக வெளியேற உதவி புரிகிறது. இதனால் உடலில் உள்ள கூடுதல் நீர் மற்றும் நச்சுப் பொருட்களை அது வெளியேற்றுகிறது. இவைதான் உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும்.
  5. சரியாக ஜீரணமாகாமல் அல்லது மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலியை கருப்பு மிளகு பெரிதும் குறைக்கிறது. மிள்காய்ப்பொடிக்கு பதிலாக நாம் இனிமேல் மிளகுப்பொடியை பயன்படுத்தலாமே.
  6. கருப்பு மிளகை நன்றாக பொடி செய்து ஒரு கப் தயிருடன் கலக்கவும். இந்தக் கலவையை தலையில் நன்றாக பரவலாகத் தடவவும்.இது 5 தலைப்பொடுகை ஒழிக்கும்.அரை மணிநேரம் கழித்து தலை முடியை நன்றாக அலசவும். இப்போது ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது. மறுநாள் ஷாம்பூ போட்டு குளிக்கவும்.
  7. மேலும் கருமிளகு மனச்சோர்வையும், களைப்பையும் போக்குகிறது. மூளையின் அறிதல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.
  8. தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெதுவெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி உணவை செரிக்க உதவும்.
  9. மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும்.
  10. மிளகு கஷாயத்தில் பனை சர்க்கரை சேர்த்து குடித்து வர வேண்டும். ஜலதோஷத்தால் வந்த இருமலை குணமாகும்.
  11. மிளகு பொடியை பனைவெல்லத்தில் சேர்த்து பிசைந்து, கண்மையளவு 2 (அ) 3 நாட்கள் எடுக்க தீரும்.இது உடல் சூட்டினால் வரும் இருமலைப் போக்கும்.
  12. உடல் நச்சுத்தன்மை நீங்க, விஷக்கடி நஞ்சுகள் நீங்க மிளகு 10, வெற்றிலை 1, அருகம்புல் 1 கைப்பிடி – இடித்து போட்டு குடிநீரிட்டு குடித்து வரவும்.
  13. பூரான் கடி நீங்க வெற்றிலை சாறு 180 மிலியுடன் மிளகு 35 கிராம் சேர்த்து 1 நாள் முழுவதும் ஊற வைத்து பின் ஊறிய மிளகை உலர்த்தி பொடி செய்து பீங்கான் பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை இருவேளை 2 விரல் அளவு வெந்நீரில் எடுத்து வர பூரான் கடி விஷம் உடலில் நீங்கும். (பத்தியம்: உப்பு, புளி நீக்கல்)
  14. புழுவெட்டுக்கு மிளகு, வெங்காயம், உப்பு – அரைத்து புழுவெட்டு உள்ள இடத்தில் பூசிவர முடி முளைக்கும் (புண் ஏற்பட்டால் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பூசிவர புண் ஆறிவிடும்)
  15. மிளகு இரசம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்யும்.
  16. மிளகு பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.
  17. ஜீரண சக்தியையும் மேம்படுத்தும். மிளகின் காரத்தன்மைக்கு ‘காப்சாய்சின்’ என்ற வேதிப்பொருள் காரணமாக உள்ளது. மிளகின் காரம் கொழுப்பையும் ஜீரணிக்கவைக்கும். இதனால் ரத்த குழாய்களில் கொழுப்பு படியாது. ரத்த குழாய் தடிமனாவதும் தவிர்க்கப்படும். உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் ‘ஆன்டி ஆக்ஸிடண்ட்’ தன்மையும் மிளகிற்கு உள்ளது. பசி குறைவாக உள்ள சமயங்களில், ஒரு தேக்கரண்டி மிளகு பொடியை நாட்டு சர்க்கரையுடன் கலந்து சாப்பிட வேண்டும்.